கருங்குறுவை (நெல்)
கருங்குறுவை |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
120 - 125 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
கருங்குறுவை (Karunguruvai); தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, தமிழ்நாடு, கருநாடகம், மற்றும் கேரள மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.[1]
மருத்துவ குணம்
[தொகு]கருங்குறுவையின் அரிசியில் “குஷ்டம்” எனப்படும் வெண் புள்ளி, மற்றும் விசக்கடியால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றவைகளைப் போக்கும் சக்தி உடையது.[2] மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ள, கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறி, ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும் அருமருந்தாக உருவாகிறது.[3] இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்திபேதி (காலரா) மட்டுப்படுவதாக கூறப்படுகிறது.[1]
கருங்குறுவை அரிசியை கொதிக்க வைத்த சோறு, கள்ளிப் பால், மற்றும் தேன் போன்ற கலவையைக் கொண்டு களிம்பு (பசை) (lehyam) செய்யப்படுகிறது, அப்பசைக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக் (Filariasis) குணப்படுத்தும் பண்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.[4]
பலவிதமான பண்டைய பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நெல் வகை, பெரும்பான்மையான சித்த மற்றும் நாட்டுப்புற மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, அதன் வீரியம் அதிகரிப்பதுடன் ‘கிரியா’ சக்தியின் ஊக்கியாகவும் செயல்படுகிறது. நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசிக் கஞ்சியை குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து உடல் குணமடைவதாக கூறப்படுகிறது.[5]
காலம்
[தொகு]டிசம்பர் 15 - மார்ச்சு 14, மற்றும் சூன் 1 - ஆகத்து 31 வரையான மாதகாலம் சிறந்த சாகுபடி காலமாக உள்ள இந்த நெல் இரகம், 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[5] தமிழகத்தில் டிசம்பர் - சனவரியில் தொடங்கும் நவரைப் பருவத்திலும், சூன் - சூலையில் தொடங்கும் குறுவைப் பருவத்திலும் நடவு செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.[6]
அகத்தியர் குணபாடம்
[தொகு]- மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும்
- பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற
- ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர்
- பார்க்குள் இதயெண்ணிப் பார்.
மேற்கூறிய பாடலின் பொருளானது, மணக்கத்தை அரிசி, வாலன் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும் புண்ணையும், சிறுநஞ்சுகளையும் நீக்கும்.[7]
பண்புகள்
[தொகு]- கருங்குறுவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப்போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது.
- இதன் நெல் தானியமணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.
- அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ளது.
இவற்றையும் காண்க
[தொகு]- நெல்
- பாரம்பரிய நெல்
- இலங்கையின் பாரம்பரிய அரிசி
- இயற்கை வேளாண்மை
- வேளாண்மை
- தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "கருங்குறுவை மாமருந்து". தி இந்து (தமிழ்) - சனவரி 24, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.
- ↑ "இந்தியன் வயாகரா' கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் 'பவர்' வேளாண் விஞ்ஞானி தகவல்". Archived from the original on 2021-01-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
- ↑ "அரிசியின் மருத்துவ குணங்கள்". Archived from the original on 2015-08-16. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
- ↑ Biodiversity and Food Security - page: 5 - Karunguruvai [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 "Karunguruvai (ஆங்கிலம்)". www.nammanellu.com - 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-14.
- ↑ Planting Seasons in Tamil Nadu
- ↑ "சித்தர்களின் கூற்றுப்படி - அரிசி வகைகள் - பயன்கள் - அறிவியல் ஆராய்ச்சி". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.