நார்வே போர்த்தொடர்
நார்வே போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பகுதி | |||||||
ஜெர்மானியத் தரைப்படையினர் · நார்வீக் அருகே நார்வீஜிய பீரங்கிகள் · நார்வே அரசர் ஏழாம் ஹாக்கோன் மற்றும் பட்டத்து இளவரசர் ஐந்தாம் ஒலாஃப் · நார்வீக் அருகே ஜெர்மானியப் படையினர் · ஆசுக்கர்ஸ் போர்க் கோட்டை மீது குண்டுவீச்சு · |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஜெர்மனி | நோர்வே ஐக்கிய இராச்சியம் பிரான்சு |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜெனரல் நிக்லாசு வோன் ஃபால்கன்ஹோர்ஸ்ட் | ஜெனரல் கிரிஸ்டியான் லாக் (10 ஏப்ரல் வரை) ஜெனரல் ஓட்டோ ரூக் (10 ஏப்ரல் முதல்) |
||||||
பலம் | |||||||
~ 100,000[1] 9 டிவிசன்கள் 1 பீரங்கி பட்டாலியன் | மொத்தம்: ~ 93,000 நார்வே: 6 டிவிசன்கள்[2] ~ 55,000 பேர்[1] நேச நாடுகள்:[1] c. 38,000 |
||||||
இழப்புகள் | |||||||
5,296[3][4] | மொத்தம்: ~ 6,602[3] | ||||||
குடிமக்கள் இழப்புகள்:[3] ~. 400 பேர் கொல்லப்பட்டனர் |
நார்வே போர்த்தொடர் (Norwegian Campaign) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வே நாட்டில் நாசி ஜெர்மனிக்கும் நேச நாட்டுப்படைகளுக்கும் நிகழ்ந்த மோதல்களைக் குறிக்கிறது. இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்று நார்வே நாட்டை ஆக்கிரமித்தன.
நடுநிலை வகித்து வந்த நார்வே நாடு பல்வேறு காரணங்களால் அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகளின் போர் முயற்சிக்கு அவசியமானதாக இருந்தது. இதனால் ஏப்ரல் 9, 1940ல் ஜெர்மானியப் படைகள் நார்வே மீது படையெடுத்தன. அவற்றை எதிர்கொள்ள நேச நாட்டுப்படைகளும் நார்வேக்கு அனுப்பப்பட்டன. இரு மாதகால சண்டைக்குப் பின்னர் தெற்கு நார்வே முழுவதும் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டது. வடக்கு நார்வேயில் சண்டை நிகழ்ந்து கொண்டிருந்த போதே, மேற்கு ஐரோப்பாவில் போர் மூண்டதால், அங்கிருந்த நேச நாட்டுப் படைகள் திருப்பி அழைக்கப்பட்டன. தனித்து விடப்பட்ட நார்வே ஜூன் 9ம் தேதி சரணடைந்தது.
பின்புலம்
[தொகு]செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்தனால் இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் ஆரம்பமாகியது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலனவை நேச நாட்டு அணியிலோ அல்லது அச்சு நாட்டு அணியிலோ இடம் பெற்றிருந்தன. ஆனால் இரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகித்த நாடுகளும் இருந்தன. குறிப்பாக இசுக்கேண்டிநேவியாவின் டென்மார்க், நார்வே, சுவீடன் போன்றவை நடுநிலை வகித்து வந்தன. ஆனால் இரு தரப்பினுடனும் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தன. இவற்றைத் தங்களுக்கு ஆதரவாக மட்டும் செயல்படும்படி இரு தரப்பும் வற்புறுத்தி வந்தன.
இவற்றுள் நார்வே நாட்டின் நிலை குறிப்பிடத்தக்கது. நாசி ஜெர்மனியின் போர் முயற்சிக்கு இன்றியமையாத் தேவையான இரும்புத் தாது சுவீடனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. சுவீடனில் வெட்டியெடுக்கப்பட்ட தாது, தொடருந்து மூலம் நார்வேயின் வடக்கிலுள்ள நார்வீக் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சரக்குக் கப்பல் மூலம் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டது. அப்பகுதியில் ஆண்டு முழுவதும் பனி உறையாது இருக்கும் ஒரே துறைமுகம் நார்வீக் என்பதால் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. மேலும் நார்வேயின் நீண்ட கடற்கரை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலைக் கட்டுப்படுத்தத் தேவையான துறைமுகங்களைக் கொண்டிருந்தது. நார்வேயின் துறைமுகங்களைக் கட்டுப்படுத்துபவர் பால்டிக் கடலிலும் கடல் ஆளுமை கொள்ள முடியும். அதோடு நேச நாடுகள், ஜெர்மனி மீதான கடல் அடைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நார்வே நாட்டுத் துறைமுகங்கள் தடையாக இருந்தன. பிற கடல்வழிகளை அடைத்துவிட்டாலும், நடுநிலை வகித்த நார்வேயின் துறைமுகங்கள் வழியாக ஜெர்மனிக்கு சரக்குக் கப்பல் போக்குவரத்து சென்று கொண்டிருந்தது. இவ்விரு காரணங்களால் இரு தரப்பினரும் அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டனர்.
படைத்துறை தொடர்பான காரணங்களைத் தவிர, நார்வே நாட்டைக் கைப்பற்ற இரு தரப்புக்கும் அரசியல காரணங்களும் இருந்தன. பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே 1939ல் தொடங்கிய குளிர்காலப் போரில் நார்வே தனது நடுநிலையை மீறி பின்லாந்துக்கு ரகசியமாக உதவி செய்தது. இப்போரில் ஜெர்மனி சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின் காரணமாக தலையிட மறுத்துவிட்டது. இதனால் நார்வேயிலும் பிற இசுக்கேண்டிநேவிய நாடுகளிலும் மக்களுக்கு ஜெர்மனி மீது கடும் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டன. இதனை வளரவிடாமல் தடுத்து, தனது கையாளை நார்வே அரசுத் தலைவராக நியமிக்க விரும்பினார் இட்லர். நார்வேயின் முதன்மை நாசிக் கட்சி ஆதரவாளரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான விட்குன் குவிஸ்லிங் அதற்குத் தேர்ந்தெடுக்கபப்ட்டார். இதை கவனித்து வந்த நேச நாட்டுத் தலைவர்கள் நார்வே அரசு குவுஸ்லிங் கட்டுப்பாட்டில் வந்தால், அதன்மீது படையெடுக்க திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.
இப்படி இருதரப்பினரும் நார்வேயின் நடுநிலை மீது கொண்டிருந்த அவநம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆல்ட்மார்க் சம்பவம் அமைந்தது. பெப்ரவரி 1940ல் நார்வேயின் கடல் எல்லைக்குள் பிரித்தானிய போர்க்கைதிகளை ஏற்றிச் சென்ற ஆல்ட்மார்க் என்ற ஜெர்மானியப் போக்குவரத்துக் கப்பலை பிரித்தானியக் கடற்படைத் தாக்கி அவர்களை விடுவித்தது. நார்வே தனது கடல் எல்லை வழியாக போர்க்கைதிகள் அனுப்பப்படுவதை அனுமதித்தது என நேச நாடுகளும், கடல் எல்லைக்குள் தங்கள் கப்பலை பிரித்தானியர்கள் தாக்க அனுமதித்தது என ஜெர்மானியர்களும் நார்வே மீது குற்றம் சாட்டினர். இரு தரப்பினரும் நார்வே மீதான படையெடுப்பு முயற்சிகளை வேகப்படுத்தினர். ஏப்ரல் 1940ல் ஜெர்மனியின் நார்வே படையெடுப்பு தொடங்கியது.
படையெடுப்பு
[தொகு]ஏப்ரல் 9, 1940ல் ஜெர்மானியப் படைகள் கடல்வழியாகவும் வான்வழியாகவும் நார்வே மீது படையெடுத்தன வெசெரியூபங் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்த இத்தாக்குதலை ஜெர்மானியத் தரைப்படையின் 21வது கோர் மேற்கொண்டது. இதில் ஆறு டிவிசன்கள் இடம்பெற்றிருந்தன. இவை ஜெர்மானியக் கடற்படைக் கப்பல்கள் மூலமாக நார்வேயின் கடற்கரையில் தரையிறங்கின. ஓஸ்லோ, பேர்கன், நார்வீக் போன்ற பெருநகரங்களைக் கைப்பற்ற அவை உடனடியாக முயன்றன. இவை தவிர வான்வழியாக வான்குடை வீரர்கள் நார்வேயின் முக்கியமான இடங்களின் மீது தரையிறங்கி அவற்றைக் கைப்பற்றினர். நார்வேயைத் தாக்க டென்மார்க்கில் உள்ள படைத்தளங்களும் வான்படைத் தளங்களும் தேவைப்பட்டதால் அந்நாடும் அதே நாள் தாக்கப்பட்டு; ஒரே நாளில் அது சரணடைந்தது.
வெசெரியூபங்கின் ஆரம்பகட்டத்தில் டுரூபாக் கடற்கால்வாயில் ஜெர்மானியப் படைகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தாக்கப்பட்டதால், தரையிறக்கம் சற்றே தாமதமானது. இதனைப் பயன்படுத்தி நார்வீஜிய அரச குடும்பமும், அமைச்சர்களும் நாசிப் படைகளின் கையில் சிக்காமல் தலைநகர் ஓஸ்லோவிலிருந்து தப்பிவிட்டனர். இதனால் நார்வே அரசரையும், அமைச்சரவையையும் கைப்பற்றி நார்வே நாட்டுத் தலைமையை முடக்கும் ஜெர்மானியத் திட்டம் தோல்வியுற்றது. அமைச்சரவை ஓஸ்லோவைக் காலி செய்ததை பயன்படுத்திக் கொண்ட குவிஸ்லிங், தன்னைத் தானே நாட்டின் புதிய பிரதமராக அறிவித்தார். ஆனால் நார்வே நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் இதனை ஒப்பவில்லை. அரசரும், உண்மையான அரசும் நார்வேயின் வடக்குப் பகுதிகளில் தொடர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்துப் போரிட்டு வந்தனர். நார்வே அரசர் ஏழாம் ஹாக்கோன் ஜெர்மானியர்களிடம் சரணடைய மறுத்துவிட்டதாலும், நார்வே மக்கள் தன்னார்வலர்களாக நார்வீஜிய படைகளில் சேர்ந்து ஜெர்மானியர்களை எதிர்க்கத் தொடங்கியதாலும் சண்டை தீவிரமடைந்தது. மேலும் இக்காலகட்டத்தில் நார்வீஜியர்களுக்கு ஆதரவாக நேச நாட்டுப் படைகளும் நார்வேயில் தரையிறங்கின.
நேச நாட்டு எதிர்வினை
[தொகு]ஜெர்மானிய படையெடுப்பைப் பற்றிய செய்தி நேச நாட்டுத் தலைவர்களை எட்டியவுடன் நார்வேக்கு ஆதரவாக பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு படைப்பிரிவுகளை நார்வேக்கு அனுப்பி வைத்தனர். நார்வேயின் வடபகுதியில் பல இடங்களில் தரையிறங்கிய அவை, வடக்கு நோக்கியான ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றன. ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கி சில நாட்களுள், நார்வேயின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ஜெர்மானியர் வசமாகியிருந்தன. அடுத்த சில வாரங்களில் வெகு சில பகுதிகளைத் தவிர தெற்கு நார்வே முழுவதும் ஜெர்மானியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. அவற்றைத் தடுத்து நிறுத்த நேச நாட்டுப் படைகளாலும் நார்வீஜியப் படைகளாலும் இயலவில்லை. ஜெர்மனியில் இருந்து அனுப்பப்பட்ட புதிய துணைப் படைப்பிரிவுகளும், ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபே நார்வே வான்பகுதியில் வான் ஆளுமை பெற்றிருந்ததும் ஜெர்மானிய நிலையை வெகுவாக வலுப்படுத்திவிட்டன. ஏப்ரல்-மே மாதங்களில் ஜெர்மானியப் படைகள் மெதுவாக நார்வேயின் பெரும்பான்மையான பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டன.
தெற்கு நார்வேயில் நேச நாட்டுப் முயற்சிகள் தோல்வியடைந்தாலும், வடக்கில் ஜெர்மானிய படையெடுப்புக்கு முதன்மைக் காரணமான நார்வீக் துறைமுகத்தை ஜெர்மானியர்கள் கையிலிருந்து மீட்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி ஒரளவு வெற்றி கண்டது. ஒரு மாத காலத்துக்குள் நார்வீக் நகரிலிருந்த ஜெர்மானியப் படைகள் சரணடையும் நிலை உருவானது.
முடிவு
[தொகு]வடக்கு நார்வேயில் இரு தரப்பினருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போதே மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகள் தங்கள் படையெடுப்பைத் தொடங்கின. மே 10, 1940ல் தொடங்கிய இத்தாக்குதலில் சில வாரங்களில் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி விட்டன. இதனால் ஐரோப்பாவில் நேச நாட்டு மேல்நிலை உத்திநிலை மிக மோசமான கட்டத்தை எட்டியது. மேற்கு ஐரோப்பாவில் பின்வாங்கிக் கொண்டிருந்த படைகளுக்குத் துணையாக, நார்வேயிலிருந்த தங்கள் படைகளைத் திருப்பி அழைத்துக் கொள்ள நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான ஆணை மே 24ம் தேதி இடப்பட்டது.
ஜூன் முதல்வாரம் கடல்வழியாக நேச நாட்டுப் படைகள் நார்வேயைக் காலி செய்தன. தனித்து விடப்பட்ட நார்வீஜியப் படைகளால் ஜெர்மானியப் படைகளைச் சமாளிக்க இயலவில்லை. இதனால் நார்வீஜிய அரசு சரணடைய முடிவு செய்தது. இதற்கு முன் நார்வே அரசர் ஏழாம் ஹாக்கோன், அரச குடும்பம், அந்நாட்டு அமைச்சரவை ஆகியோர் நார்வேயிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்றனர். அங்கு ஒரு நாடுகடந்த அமைச்சரவையை நிறுவினர். ஜூன் 9ம் தேதி எஞ்சியிருந்த நார்வீஜியப் படைகள் சரணடைந்தன.
விளைவுகள்
[தொகு]அடுத்த ஐந்தாண்டுகள் நார்வே ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதன் கடற்கரையும், வான்படைத் தளங்களும் அட்லாண்டிக் சண்டையில் ஜெர்மானியர்களுக்கு பேருதவியாக இருந்தன. நார்வேயில் குவிஸ்லிங்க் தலைமையிலான ஒரு ஜெர்மானியக் கைப்பாவை அரசு அமைந்தது - ஆனால் அதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை, பெயரளவில் மட்டும் நார்வேயினை ஆட்சி செய்து வந்தது. உண்மையில் அதிகாரம் ஜெர்மானிய நிருவாகிகளிடத்தே இருந்தது. ஏழாம் ஹாக்கோன் அரசராக உள்ளவரை தங்கள் ஆக்கிரமிப்புக்கு நார்வீஜிய மக்களிடையே ஆதரவு கிட்டாது என்பதை உணர்ந்த ஜெர்மானியர்கள், அரசர் பதவி விலகும்படி கேட்டுக்கொள்ள நார்வே நாடாளுமன்றத்தை வற்புறுத்தினர். ஆனால் ஹாக்கோன் பதவிவிலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இங்கிலாந்தில் நாடுகடந்த நார்வே அரசு நிறுவப்பட்டது. அங்கு நார்வே தன்னார்வலர்களையும், தப்பி வந்தவர்களைய்ம் கொண்டு கடற்படை, வான்படை, தரைப்படை ஆகியவை கட்டமைக்கப்பட்டன. விடுதலை நார்வே படைகள் என்றழைக்கப்பட்ட இவை அடுத்த ஐந்தாண்டுகள் நாசி ஜெர்மனிக்கு எதிரான போர்களில் கலந்து கொண்டன. நார்வேயிலும் உள்நாட்டு எதிர்ப்புப் படை ஒன்று உருவானது. பிரித்தானிய கமாண்டோ வீரர்களின் துணையுடன், நாச வேலைகளில் ஈடுபட்டு ஜெர்மானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தது. நார்வீக் நகரத்தில் நடந்த சண்டைகளால் இரும்புத் தாது ஏற்றுமதி ஆறு மாதங்களுக்குத் தடைபட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lunde 2009, p. 541
- ↑ Nøkleby, Berit (1995). "Forsvaret". Norsk krigsleksikon 1940-45. Ed. Dahl, Hjeltnes, Nøkleby, Ringdal, Sørensen. Oslo: Cappelen. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8202141389.
- ↑ 3.0 3.1 3.2 Lunde 2009, p. 542
- ↑ Derry 1952: 230
மேற்கோள்கள்
[தொகு]- Derry, T.K. (1995) [1st pub. HMSO London: 1952]. Butler, J.R.M (ed.). The campaign in Norway. History of the Second World War: Campaigns Series. Nashville, Tenn.: Battery Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-898392-20-9.
- Dickens, P. (Capt.) (1974) Narvik : battles in the fjords, Sea battles in close-up, 9, London: Ian Allan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7110-0484-6
- Dildy, Douglas C. Denmark and Norway, 1940: Hitler's Boldest Operation; Osprey Campaign Series #183; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846031175. Osprey Publishing, 2007
- Elting, J.R. (1981) Battles for Scandinavia, World War II Series, Alexandria, VA: Time-Life Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-80943-395-8
- Lunde, H.O. (2009) Hitler's Pre-Emptive War, The Battle for Norway, 1940, Philadelphia & Newbury : Casemate, 590 p., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932033-92-2: see a comprehensive review of this book at: http://stonebooks.com/archives/090607.shtml
- Shirer, William L., The Rise and Fall of the Third Reich: A History of Nazi Germany, Simon and Schuster, 1990 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0671728687
- Skodvin, Magne (1991). Norsk historie 1939-1945: krig og okkupasjon (in Norwegian). Oslo: Samlaget. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-521-3491-2.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: unrecognized language (link)