குல்சன் குமார்
குல்சன் குமார் | |
---|---|
பிறப்பு | குல்சன் துவா 5 மே 1951 புது தில்லி, இந்தியா |
இறப்பு | 12 ஆகத்து 1997 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 46)
தேசியம் | இந்தியாn |
பணி | வணிகர், தயாரிப்பாளர் (திரைப்படம்) |
செயற்பாட்டுக் காலம் | 1972 – 1997 (இறப்பு) |
வாழ்க்கைத் துணை | சுதேசு குமாரி (1975-1997) |
பிள்ளைகள் | பூசன் குமார் (மகன்) துளசி குமார் (மகள்) குசாலி குமார் (மகள்) |
உறவினர்கள் | கிருசன் குமார் (தம்பி) |
குல்சன் குமார் (Gulshan Kumar, குல்சன் குமார் துவா, மே 5, 1951 – ஆகத்து 12, 1997)[1] டி-தொடர் இசைச் சிட்டை (music label) நிறுவியவர்.[2] தவிர பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். டி-தொடரை தற்போது இவரது தம்பி கிருசன் குமாரும் மகன் பூசன் குமாரும் கவனித்து வருகின்றனர்.[3] இவரது மகள் துளசி குமார் பின்னணிப் பாடகியாக விளங்குகின்றார்.[4]
வாழ்க்கை
[தொகு]குல்சன் துவா தில்லியில் தரியாகஞ்சு சந்தைப்பகுதியில் பஞ்சாபிக் குடும்பத்தில், சந்திரபான் என்ற பழச்சாறு வியாபாரிக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே தனது தந்தையின் பழச்சாறு வணிகத்தைக் கவனித்து வந்தார்.
அவரது குடும்பம் தங்கள் பழச்சாறுக் கடைக்கு மாறாக இசைத்தட்டு மற்றும் விலைமலிவான ஒலிநாடாக்களை விற்கும் கடையை வாங்கினர். இதுவே குல்சன் தனது பரந்த இசைப் பேரரசை நிறுவ ஆரம்பமாக அமைந்தது.[5]
இசை வணிகமும் திரைப்பட வாழ்க்கையும்
[தொகு]குல்சன் குமார் சொந்தமாக இசைப் பேழை தயாரிக்கும் நிறுவனமாக "சூப்பர் கேசட்சு இன்டஸ்ட்ரீசு" என நிறுவினார். இது விரைவிலேயே இலாபகரமான தோழிலாக மாறியது. நொய்டாவில் தனது இசைத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். வணிகம் வளரத் தொடங்கியதும் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.[6]
பாலிவுட்டில் இவரது முதல் திரைப்படமாக 1989இல் லால் துப்பட்டா மல்மல் கா அமைந்தது. அடுத்ததாக 1990இல் ஆஷிக்கி என்ற திரைப்படம் வெளியானது; வணிகமுறையில் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தின் பாடல்களும் பரவலாக பாராட்டப்பட்டன. அடுத்து இவரது தயாரிப்பில் பாகர் ஆனே தக், தில் ஹை கெ மாந்தா நகிம், ஆயி மிலன் கி ராத், மீரா கா மோகன், மற்றும் ஜீனா மர்னா தேரே சங் ஆகிய படங்கள் வெளியாயின.[6]
கொலை
[தொகு]ஆகத்து 12, 1997 அன்று மும்பையின் புறநகர்ப் பகுதியான மேற்கு அந்தேரியின் ஜீத் நகரில் சீதேசுவர் மகாதேவர் மந்திரில் குல்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.[7] இசையமைப்பாளர் இணையர் நதீம்-சிரவண் இருவரில் நதீம் இந்தக் கொலையை கூலிக் கொலையாளிகளை வைத்து நடத்தியதாக காவல்துறை குற்றம் சுமத்தியது. இருப்பினும் சனவரி 9, 2001இல் வினோத் ஜாக்தப் இக்கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 22, 2002இல் கீழமைவு நீதிபதி எம் எல் தகில்யானி ஜாக்தப்பிற்கு ஆயுள் தண்டனை வழங்கினார். குடும்பத்தினரின் விருப்பப்படி குல்சன் குமார் உடல் தில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு எரியூட்டப்பட்டது.[8]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ குல்சன் குமார் பரணிடப்பட்டது 2013-08-30 at the வந்தவழி இயந்திரம் பிரித்தானியா திரைப்படக் கழகம்.
- ↑ http://www.atimes.com/atimes/South_Asia/FE29Df05.html பரணிடப்பட்டது 2012-09-25 at the வந்தவழி இயந்திரம் Indian film financing comes of age, 29 May 2004
- ↑ About Us பரணிடப்பட்டது 2009-03-05 at the வந்தவழி இயந்திரம் T Series Official website.
- ↑ The daughter of the legendary Gulshan Kumar of T Series Tulsi Kumar comes out with her maiden solo album
- ↑ Gulshan! ரெடிப்.காம், 12 July 1997
- ↑ 6.0 6.1 "Gulshan Kumar Biography - Gulshan Kumar Profile, Childhood, Life, Timeline". www.iloveindia.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
- ↑ Gulshan Kumar shot dead, scare in filmdom இந்தியன் எக்சுபிரசு, 13 August 2001.
- ↑ Stunned silence at Super Cassettes' Delhi factory இந்தியன் எக்சுபிரசு, 13 August 2001.