உள்ளடக்கத்துக்குச் செல்

இ. அம்பிகைபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் அம்பி
பிறப்புஇராமலிங்கம் அம்பிகைபாகர்
(1929-02-17)பெப்ரவரி 17, 1929
நாவற்குழி, யாழ்ப்பாணம்
இறப்புஏப்ரல் 27, 2024(2024-04-27) (அகவை 95)
சிட்னி, ஆத்திரேலியா
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்தாமோதரர் இராமலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பு

இ. அம்பிகைபாகர் (கவிஞர் அம்பி, 17 பெப்ரவரி 1929 – 27 ஏப்ரல் 2024) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். 1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர்.[1] புலம்பெயர்ந்து சிட்னியில் வசித்து வந்தார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகளை எழுதி வந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழியில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

எழுத்துலகில்

[தொகு]

தினகரன் இதழில் வெளிவந்த இலட்சியக் கோடி என்ற சிறுகதையின் மூலம் அறிமுகமானவர்.[1] தமிழ்நாட்டில் அண்ணாத்துரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்.[1] ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக சுபமங்களா இதழால் வர்ணிக்கப்பட்டவர்.[1] யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, யூனியன் கல்லூரியின் "வாழ்த்தி வணங்கி மகிழ்வோம் உவந்து தலை தாழ்த்திப் பணிந்து தொழுவோம்" என்ற பாடசாலைப் பண் கவிஞர் அம்பியால் எழுதப்பட்டு இன்றும் படிக்கப்பட்டு வருகிறது.

சமூகப்பணி

[தொகு]

கொழும்பில் பாடவிதான அபிவிருத்தி சபையில் பணியாற்றியவர். பல பாட நூல்களின் ஆலோசகராக விளங்கியவர். ஆத்திரேலியாவில் தமிழ் மாணவர்களுக்கென பாட நூல்கள் உருவாக்கப்பட்டபோது இவரது ஆலோசனைகளும் பெறப்பட்டன. தலைமுறை இடைவெளி தொடர்பான கருத்தாடல்களுக்கும் இவர் தலைமை வகித்திருந்தார்.[1]

டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி

[தொகு]

இவர் தமிழுக்குச் செய்த அரும்பணிகளில் ஒன்று மருத்துவத் தமிழ் முன்னோடி மருத்துவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீனை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கிறீனுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டார்.[1]

படைப்புகள்

[தொகு]
  • கிறீனின் அடிச்சுவடு (யாழ்ப்பாணம், 1967)
  • அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள், சுன்னாகம், 1969)
  • வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம், கொழும்பு, 1970)
  • கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள், கொழும்பு, 1992)
  • அந்தச் சிரிப்பு
  • யாதும் ஊரே; ஒரு யாத்திரை
  • அம்பி கவிதைகள் (சென்னை, 1994)
  • மருத்துவத் தமிழ் முன்னோடி (சென்னை, 1995)
  • Ambi's Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி, 1993, 1996)
  • Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green (கொழும்பு, 1998)
  • உலகளாவிய தமிழர் 1999
  • A String of Pearls
  • பாலர் பைந்தமிழ்
  • Lingering Memories (ஆங்கிலம் மூலம் கற்கும் தமிழ்க்குழந்தைகளுக்கான கவிதை நூல்)
  • The World Wide Tamils
  • A String of Pearls

விருதுகள்

[தொகு]
  • உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு விருது (தங்கப்பதக்கம், 1968)
  • இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ (1993)
  • கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது (1994)
  • அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது (1997)
  • கனடாவில் சி. வை. தாமோதரம் பிள்ளை விருது (தங்கப்பதக்கம், 1998)
  • அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது (2004)

இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி பெருமைப்படுத்தியுள்ளன.

நாடகங்கள்

[தொகு]

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறின. அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் விரிவான ஆய்வு நூல் (அம்பி: வாழ்வும் பணியும்) 2003 ஆம் ஆண்டு வெளியாகியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "எழுத்தாளர் அம்பி". தினகரன். 4 ஏப்பிரல் 2010. Archived from the original on 3 சூலை 2024. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
தளத்தில்
இ. அம்பிகைபாகர் எழுதிய
நூல்கள் உள்ளன.