உள்ளடக்கத்துக்குச் செல்

யொஹான்னெஸ் வெர்மீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யொஹான்னெஸ் வெர்மீர்
Johannes Vermeer
The Procuress, கி. 1656 - இடது பக்கத்தில் இருப்பது வெர்மீரின் தன் ஓவியம் எனக் கருதப்படுகிறது.[1]
பிறப்புஞானசுநானம் (1632-10-31)31 அக்டோபர் 1632
டெல்ஃப்ட், நெதர்லாந்து
இறப்பு15 திசம்பர் 1675(1675-12-15) (அகவை 43)
டெல்ஃப்ட், நெதர்லாந்து
தேசியம்டச்சு
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்34 ஓவியப் படைப்புகள்[2]

யொஹான்னெஸ் வெர்மீர் (Johannes Vermeer) அல்லது யான் வெர்மீர் (Jan Vermeer) (என்பவர் நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 1632 ஆண்டில் ஞானஸ்நானம் பெற்றார். 1675 டிசம்பர் 15 ஆம் தேதி இறந்தார். இவரது ஓவியங்களிற் பல நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் உள்ளகக் காட்சிகளாக அமைந்துள்ளன. நெதர்லாந்தின் டெல்வ்ட் என்னும் நகரிலேயே இவர் தனது முழு வாழ்க்கைக் காலத்தையும் கழித்தார். அக்காலத்தில் இவர் ஓரளவுக்கு வெற்றி பெற்ற ஓவியராகத் திகழ்ந்தார். எக்காலத்திலும் இவர் பண வசதி உள்ளவராக இருந்ததாகத் தெரியவில்லை. குறைந்த அளவு ஒவியங்களை இவர் வரைந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம்.[3] இவர் இறக்கும் போது அவரது மனைவியையும், பதினொரு பிள்ளைகளையும் கடனாளிகளாக விட்டுவிட்டே இறந்தார். ஏறத்தாழ 200 ஆண்டுகள் அவர் முற்றாகவே மறக்கப்பட்டு இருந்த போது, 1866 ஆம் ஆண்டில், கலை விமர்சகரான தோரே பியூகர் (Thoré Bürger), 66 ஓவியங்களை அவருடையதாகக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினார். இன்று அவற்றில் 34 ஓவியங்கள் மட்டுமே அவருடையவையாகக் கணிக்கப்படுகின்றன.[2] அக்கட்டுரைக்குப் பின், அவரது புகழ் வேகமாக உயர்ந்தது. இன்று, நெதர்லாந்தின் பொற்காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த ஓவியராக வெர்மீர் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். குறிப்பாக, ஒளியை இவர் தனது ஓவியங்களில் கையாண்ட விதத்துக்காகப் பெரிதும் சிறப்பிக்கப்படுகின்றார்.

வாழ்க்கை

[தொகு]

வெர்மீரின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதளவே தெரிய வந்துள்ளது. இவரைப் பற்றிய தகவல்கள், சில பதிவுகள், சில அரச ஆவணங்கள், பிற ஓவியர்களுடைய கருத்துக்கள் என்பன மூலமே ஓரளவுக்குத் தெரிய வந்துள்ளது எனலாம்.

இளமைக் காலம்

[தொகு]
முத்துத் தோட்டுடனான சிறுமி.
பால்காரி (1658-1660)

ஜொஹான்னெஸ் வெர்மீர் பிறந்த தேதி தெளிவாகத் தெரியவில்லை எனினும், 1632 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி ஞானஸ்நானம் பெற்றது தெரிய வந்துள்ளது. இவரது தந்தையாரான ரேனியெர் வெர்மீர் (Reynier Vermeer), கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பட்டு நூற்பாளரும், ஓவிய விற்பனையாளரும் ஆவார். இவரது தாயார் பெல்ஜியத்தின் ஆண்ட்வ்வெர்ப் (Antwerp) என்னும் இடத்தைச் சேர்ந்த டிக்னா என்பவர். ஜொஹான்னெஸின் தந்தையாரே அவரை ஓவியத்துறைக்கு அறிமுகப்படுத்தி இருக்கக் கூடும். 1641 ஆம் ஆண்டில் டெல்வ்ட்டில் உள்ள சந்தைச் சதுக்கத்துக்கு அருகே ஒரு பெரிய விடுதியை வெர்மீர் குடும்பத்தினர் வாங்கினர். அதன் பின், ரேனியர் ஒரு விடுதி உரிமையாளராகவும் அதே வேளை ஒரு ஓவிய விற்பனையாளர் ஆகவும் இருந்திருக்கக் கூடும். ரெய்னியர் இறந்த பின்னர் மெச்செலென் என்ற அவரது விடுதியும், ஓவிய வணிகமும் ஜொஹானசிற்கு உரிமையானது.

திருமணமும், குடும்பமும்

[தொகு]
வைன் கிண்ணத்துடனான சிறுமி, 1660

ஜொஹான்னெஸ் வெர்மீர் ஒரு புரட்டஸ்தாந்த மதத்தினராக இருந்தபோதும், ஒரு கத்தோலிக்கரான, கத்தரீனா போல்னெஸ் (Catherina Bolnes) ஏப்ரல் 1653 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். போல்னெசின் குடும்பத்தினர், வெர்மீர் குடும்பத்தினரைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் கூடிய பணவசதி கொண்டவர்களாக இருந்தனர். திருமணத்துக்கு முன்னர் இவர் கத்தோலிக்கராக மதம் மாறிவிட்டதாகக் கருதப்படுகின்றது. இவரது பிள்ளைகள் அனைவருக்கும், கத்தோலிக்க மதப் பெரியார்களின் பெயர்களே இடப்பட்டிருந்தது இதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது. இவரது ஓவியம் ஒன்றுக்கு நம்பிக்கையின் உருவகம் (The Allegory of Faith) என்று பெயரிடப்பட்டிருப்பதும் அவரது கத்தோலிக்க மத நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.

வெர்மீரின் ஓவியங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Procuress: Evidence for a Vermeer Self-Portrait" Retrieved September 13, 2010
  2. 2.0 2.1 Jonathan Janson, Essential Vermeer: complete Vermeer catalogue accessed 16 June 2010
  3. "Jan Vermeer". The Bulfinch Guide to Art History. Artchive. பார்க்கப்பட்ட நாள் 21 September 2009.

மேலதிக வாசிப்பிற்கான நூல்கள்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]